Wednesday, August 17, 2011

worth to do


இருபத்தோரு வயசுக்கு முன்னால் ஓடியாடி துள்ளித்திரியும் சின்னஞ்சிறுசுகள் என்னவெல்லாம் உருப்படியாக செய்யலாம் என்று நாட்ய வ்ருக்‌ஷா என்ற நடனப் பள்ளியின் ஸ்தாபகர் மற்றும் தலைவர் கீதா சந்த்ரன் ”இனியவை பத்து” ஒன்று பட்டியலிட்டுள்ளார். சண்டே ஸ்டாண்டர்ட் ஆங்கில வாரப் பத்திரிக்கையை ஐந்து நிமிடம் புரட்டியதில் கண்ணில் பட்ட செய்தி. ஒவ்வொன்றையும் ஒரு கிளான்ஸில் படிக்கும்படி சிக்கனமாக சிந்திக்கும்படி சொல்லியிருந்தார். அதற்கு அங்கே இங்கே கொஞ்சம் அலங்காரம் பண்ணி, சீவி சிங்காரித்து  நம்ம ஸ்டைலில் வாய் மூடா வளவளா லிஸ்டாக கீழே.

1. கிராமத்தில் விவசாயிகளுடன் ஒரு வாரம் குடியிருந்து அந்த வியர்வைத் துளியின் மகத்துவத்தை, உழைப்பின் மேன்மையை, மகோன்னதத்தை உணருங்கள். #லீவு விட்டால்  பாட்டி தாத்தா ஊருக்கு செல்லும் கலாச்சாரம், காலம் எல்லாம் மலையேறிப் போயாச்சு. இதில் கிஸானுடன் கீத்துக் கொட்டாயில் காலம் கழிப்பார்களா?
2. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டாமல், எப்பவும் கொடைக்கானல், ஊட்டி என்று லோக்கலாக ஊர் சுற்றாமல் সুপ্রভাত என்று சொல்லி வணங்கும்; நம் பாரத தேசத்தில் இருக்கும் பிற மாநிலத்திற்கும் ஒரு டூர் அடியுங்கள். (மேல் கோட்டில் வௌவால் போல தொங்கும் எழுத்துக்களை translate.google.com என்ற ஸைட்டில் கொடுத்து எந்த ஊர், எந்த பாஷை என்று தெரிந்துகொள்ளவும்.)
3. இருநூறு ரூபாய்க்கு ஒரு ஆறிப் போன ஜில் காஃபியும், மவுண்ட் ரோடு எக்ஸ்பிரஸ் மாலில் ஏதாவது ஒரு ஜில்ஜில் மாலு கண்ணாவை சைட் அடித்துக்கொண்டும் இல்லாமல் இயற்கையின் அரவணைப்பில், எழில் கொஞ்சும், மயில் ஆடும், குயிலும் பாடும் ஏதாவது ஒரு வனப் பிரதேசத்தில் ஒரிரு நாட்கள் முகாமிடுங்கள். 
4. போலிச் சாமியார்களின் ஊரை அடித்து உலையில் போடும் அகாசுகா திருட்டுத் தனத்திற்கு “ஸ்வாமிஜி” என்று கைக் கோர்த்துக் கொண்டு ஒத்துழைக்காமல், சாமானியர்களுக்கு சமூகத் தொண்டாற்றும் லாபம் பார்க்காத அமைப்பில் ஒரு வாரம் உங்களைப் பரிபூரணமாக சமர்ப்பித்து தன்னார்வலராக பணிபுரியுங்கள்.

 5. கிருஸ்துமஸ், ஹோலி, பக்ரீத், தீபாவளி போன்ற நம் நண்பர்களின் வீட்டுப் பண்டிகைக் காலங்களில், “என்னங்க ஸ்பெஷல் கேக் கிடையாதா?”, “என்ன பாய். பிரியாணி எங்கே? கண்டிப்பா லெக் பீசும் இருக்கணும்” “தீவாளி ஸ்வீட் இல்லையா?” என்று வயிறு மட்டும் வளர்க்காமல் அவர்களது வழிபாட்டுக் கூடத்தையும் ஒரு நடை போய் பாருங்கள்.
6. அரசியல்வாதிகள் தலையில் குல்லாவோடு வருஷா வருஷம் இஃப்தார் நோன்புக் கஞ்சி வோட்டுக்காக குடிப்பது போலல்லாமல், பிற மத நண்பர்களுடன் அவர்கள் கிரஹத்திர்க்கு சென்று ஒரு வேளை சகோதரத்துவத்துடன் உங்களுக்குப் பிடித்ததை அவர்களுடன் சேர்ந்து வயிறார உணவருந்துங்கள்.
7. நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை அது இல்லாதோருக்கு பரிசளித்து மகிழ்தல். இதைக் கொஞ்சம் விஸ்தாரமாக பார்ப்போம். நாட்டில் நான்கிற்கு மூன்று பேர் டாஸ்மாக்கில் ’சரக்கு’ சாப்பிடும் போதும் ரோடோரப் பொட்டிக் கடையில் ’தம்’ பற்ற வைக்கும் போதும் தாராள ப்ரபுக்களாக இருப்பார்கள். “இந்தா மச்சி! இந்தா மாமா” என்று உறவின்முறையில் பாந்தமாக வாயில் சொருகி கொளுத்திவிடுவார்கள். தன் கைக் குழந்தைக்கு சோறூட்டும் ஒரு தாயின் பரிவு அந்தச் செயலில் தொக்கி நிற்கும். இப்படியில்லை, இதுவல்ல. ஒரு நல்ல புஸ்தகம் நமக்கு மிகவும் பிடித்தால் அதைப் படிக்கும் ஆர்வத்துடன் ஏங்கி நிற்கும் யாருக்காவது அதை பரிசளிக்கலாம். அல்லது நம்மிடம் இருக்கும் ஆதிகால கம்ப்யூட்டரை அதுகூட இல்லாத மக்களுக்கு சாதாரண விஷயங்கள் தெரிந்து கொள்வதர்க்கு தானமாக கொடுக்கலாம். இது போன்ற நற்செயல்களை குறிப்பிடுகிறார்.
8. ”கநாகளைகக்ககு கபீகச்கசுகக்ககு கலகவ் கபகண்கண கபோகலாகமா?” போன்ற சர்வதேசத் தரம் வாய்ந்த cryptic “க”னா மொழி போன்ற கண்ட கபாகஷைகயை கற்றுக் கொள்வதற்கு பதில் பத்து இந்திய மொழிகளில் கீழ் கண்டவற்றை பேசக் கற்றுக் கொள்ளுதல்.  அடிப்படை உறவுகள் பற்றியும் மற்றும் அத்தியாவசியமான சில வார்த்தைகள்.

மாதா/பிதா
சோதரன்/சோதரி
கணவன்/மனைவி
மாமா/மாமி
பசிக்குது/ பசிக்கலை
தண்ணீர், பால்
தயவுசெய்து எனக்கு உதவ முடியுமா?
நான் தொலைந்துவிட்டேன்.
நன்றி

அடுத்தவர்களது பாஷையில் கெட்ட வார்த்தைகள் மட்டும் தேர்ந்தெடுத்துக் கற்றுக்கொள்ளும் ப்ரஹஸ்பதிகளும் இம் மண்ணுலகத்தில் உண்டு.

9. ஐந்து விதமான கலாப்பூர்வமான நடன நிகழ்ச்சிகளை நாட்டியமாடும் சபாக்களுக்கு சென்று ரசித்துவிட்டு ”இது அப்படி, அது இப்படி” என்று வித்தியாசத்தை உணருங்கள். பரதம், குச்சிப்புடி, கதகளி போன்ற குடும்பத்தோடு பார்க்கும் “U" சான்றிதழ் பெற்ற டான்ஸ் ப்ரோகிராம்கள் மட்டும். #அவர் ஒரு நடனப் பெண்மணி. அவரின் தேர்வு அது. நீங்கள் ஏதாவது அறிவு ஜீவிக்கள் நடத்தும் ஒரு பக்க வசனம் மட்டுமே இருக்கும் ஓரங்க நாடகங்கள் பார்க்கலாம். தப்பில்லை.

10. ஐந்து வகையான சங்கீத கச்சேரிகளை நேரடியாகக் கண்டு களியுங்கள்.
ஒன்பதும், பத்தும் கொஞ்சம் இலகுவாக செயல்படுத்தக்கூடிய அறிவுரைகள்.

சமீபத்தில் மஹாராஷ்ரா அரசாங்கம் சாராயம் குடித்து 'தாக சாந்தி' செய்பவர்களது வயசு குறைந்தது இருபத்தைந்து ஆக இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை பிறப்பித்ததற்கு எதிர்ப்பு/ஆட்சேபம் தெரிவித்த பாலிவுட் நடிகர் இம்ரானுக்காக எழுதியதாம் இது. இம்ரானின் வாதம் என்னவெனில், “இதன் மூலமாக நீங்கள் சிகையைக் கூட பிடுங்க முடியாது. போலிச் சான்றிதழ்களும், போலீசுக்கு மாமுலும் தான் கிடைக்குமே தவிர பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது” என்கிறார். குடிகாரனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது. லாஜிக்தான். இதுவும் சரியாகத் தான் படுகிறது.

படக் குறிப்பு: லிஸ்ட் என்பதால் இந்தப் படம். தத்வார்த்தமாக ஒரு சிறு குழந்தையின் கையை ஒருவர் பிடித்திருப்பது போல இருப்பதால் கூடத்தான்.